பாரதிதாசன் பல்கலைக்கழக மகளிர் ஆக்கி போட்டி: ஜமால் முகமது கல்லூரி பெண்கள் அணி 3-வது முறையாக சாம்பியன்
திருச்சி(கே.கே.நகர்), அக்.8-
திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக மகளிர் ஆக்கி போட்டியில் ஜமால் முகமது கல்லூரி அணி தொடர்ந்து மூன்றாவது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றது.
மகளிர் ஆக்கி போட்டி
திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக ஆளுமைக்குட்பட்ட கல்லூரிகளுக்கு இடையேயான மகளிர் ஆக்கி போட்டிகள் திருச்சி ஜமால் முகமது கல்லூரியில் நடந்தது.
இந்த போட்டியில் திருச்சி ஜமால் முகமது கல்லூரி, ஹோலி கிராஸ் கல்லூரி, ஸ்ரீமதி இந்திரா காந்தி கல்லூரி, புதுக்கோட்டை மாமன்னர் கல்லூரி, திருவாரூர் ராபியாம்மாள் அகமது உசேன் கல்லூரி, புஷ்பம் கல்லூரி அணிகள் கலந்து கொண்டன.
3-வது முறையாக சாம்பியன்
இறுதிப் போட்டியில் திருச்சி ஜமால் முகமது கல்லூரி அணியும், ஹோலிகிராஸ் கல்லூரி அணியும் மோதியது. இதில் ஜமால் முகமது கல்லூரி அணி 3-0 என்ற கோல் கணக்கில் ஹோலிகிராஸ் கல்லூரி அணியை வென்று தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக சாம்பியன் கோப்பையை தக்க வைத்துக் கொண்டது. மூன்றாவது இடத்தை புதுக்கோட்டை மாமன்னர் கல்லூரி அணியும், நான்காவது இடத்தை ஸ்ரீமதி இந்திராகாந்தி கல்லூரி அணியும் பெற்றது.
பின்னர் நடந்த பரிசளிப்பு விழாவில் பாரதிதாசன் பல்கலைக்கழக உடற்கல்வித்துறை தலைவர் சந்திரசேகர் கலந்து கொண்டு வெற்றி பெற்ற அணிக்கு பரிசுக்கோப்பை மற்றும் சான்றிதழ்களை வழங்கினார். முடிவில் ஒருங்கிணைப்பாளர் பேபி ஷகிலா நன்றி கூறினார். போட்டிக்கான ஏற்பாடுகளை கல்லூரி உடற்கல்வி இயக்குனர் ஷாயின்ஷா செய்திருந்தார்.
வீராங்கனைகளுக்கு பாராட்டு
மூன்றாவது முறையாக சாம்பியன் பட்டம் வென்ற ஜமால் முகமது கல்லூரி அணி வீராங்கனைகளை கல்லூரியின் செயலாளர் அப்துல் கபூர், பொருளாளர் கலீல் அகமது, இணை செயலாளர் காஜா நஜ்முதீன் மற்றும் முதல்வர் ஷேக் முகம்மது, துணை முதல்வர் முகம்மது இஸ்மாயில் ஆகியோர் பாராட்டினார்கள்.
Thursday, October 8, 2009
Subscribe to:
Posts (Atom)